ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129
weblink
பாடல்: 129
இன்றடியேன் உம்மை நோக்கி வணங்குவோமேல்;
இரண்டுபடும் ஆதலினால்
அதுவும் கூடா(து)!
அன்றி எமை நோக்கி யாம்
வணங்குவோமேல்;
அணுகுபலன் இலாமையினால் அதுவும் கூடா(து)!
என்றும் ஓர் வடிவான
உம்மை நோக்கி;
இருமையுற யாம் இன்று வணங்குவோமேல்;
நின்ற எம்மை அஞ்ஞானியென
நீ சொல்வாய்!
நிர்மலமாம் தன்னிலையில்
இருமை உண்டோ?
கருத்து:
ஓ எம் ஐயாவே! பரிபூரண மெய்யனே! ஆனந்த தூயனே! உம்மை எப்படி யாம் வணங்க முடியும்? எனத் தெரியவில்லையே? இப்போது யாம் உம்மை வணங்கினால், அங்கு இரண்டுபடும். ஆகவே இயலவில்லை!
நீயே யாம்! யாமே நீ! என ஐக்கியமான பின்பு, யாரை யார் வனங்குவது? யார் அவ்வணக்கத்தை ஏற்பது? வணக்கம், வந்தனம், உபசாரம், உபகாரம், இவை அனைத்தும் இரண்டு என்ற துவைத நிலையில்தான், ஒருவர் செய்ய ஒருவர் ஏற்க, வாய்ப்பு உண்டு. இங்கு இருவரைக் காணோமே! ஒருவர் என்ற இருப்பும் மறைந்து வருகிறதே பிரபோ?
உலக நிலையோ, தெய்வ நிலையோ, பலன் இல்லாமல், மேலே கூறிய நிலையில், எவரும் செய்ய மாட்டார்கள். இங்கோ பலமும் (சக்தியும்) இல்லை! பலனும் (ஒர் பொருளும் - வியாபாரமும்) இல்லை! இது என்ன ஆச்சர்யம்?
யாம் தான், எப்படியும், நீர் ஸ்ரீசத்குருவாயிற்றே என, உன்னை எண்ணி வணங்கினால், ஹே அஞ்ஞானியே என கை கொட்டி சிரிப்பாய்! எம்மை யாம் வணங்கவும் இயலவில்லை! வணங்கவும் கூடாது! எம்மை எப்படி, யாமே வணங்க முடியும்? ஹே ஸத்குருநாதா! நாம் இருவரும்
இவ்வளவு கேவலமான நிலையை
அடைந்து விட்டோமே! பரவாயில்லை! இங்கும் நாம் இருவரும் ஒன்றாய் இருப்பதால் ஒன்றும் தோற்றவில்லை!
நம் பாடு கேவலம்தான்!
ஆகாயம் போல் நிர்மலமான நிலையில், நமக்கு அன்னியமாய் எதுவும் இல்லாத தன்மையினால், எம் ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ள யாருமில்லை! வாக்குக்காகவே யாம், நீ பாடும் எனச் சொல்லிக் கொள்கிறோம், அவ்வளவுதான்?
பிரம்ம சாக்ஷாத்கார ஆனந்தம் என்பது எப்படி என்று யார் யாருக்குச் சொல்வது? அங்கு சொல்பவரும் இல்லை! கேட்பவரும் இல்லை!
ஹே ஸத்குருவார்யா! ஸத்திய சொரூபா! தாங்களே ஓர் இடத்தில் தாங்கள் அனுபவ வாக்காக கூறும் போது, நீயும் யாமும், கனி காண்
அக்கனியின் நடு (உள்ளே) இருப்பது சுவை காண்! மதுர தேனும், (ஸத்குருவும்) வெண்மை பாலின் சுவையும் (சத்சிஷ்யனும்), இரண்டற்ற நிலையில் ஒன்றாக இணைந்து, கலந்து மயமானால் அந்நிலையை யார் உரைக்க வல்வார் ? எவர் உரைக்க உள்ளார்? என உணர்த்தினீர்கள்.
இல்லை! இல்லை! இல்லை! இல்லை! இல்லை!இல்லையென்றால் இல்லவே இல்லை! உண்டு! உண்டு! உண்டு!உண்டு! உண்டு! உண்டென்றால் ஒன்றுண்டு!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129