ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 127
weblink
பாடல்: 127
ஆதலினால் யாம் கைமாறு அளிப்பதற்கும்;
அதனை அடைந்து எங்கேனும்
நீ போவதற்கும்;
ஏதுவில்லை எப்போதும் எவ்விடத்தும்;
இருப்பதெல்லாம் ஏக
ஸிதாகாயம் தானே!
ஒதியவாறு ஒரணுவும்
அயலில்லாததால்,
ஒன்றினை நீ உபதேசம் செய்வதற்கும்;
ஈதிதனை யாம் இனிமையுடன் கேட்பதற்கும்;
இடமில்லை இவ்விசித்ரம்
என்னே ஐயா?
கருத்து:
ஹே கருணைக் கடலே! காருண்ய மூர்த்தி! (ஓர் வாக்கிய விளக்கத்திற்காக இதை
கூறுகிறோம். ஆனால் உண்மையில்லை!)
யாம் கைமாறு என ஒன்றை
கொடுப்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள். அதை வாங்கிய தாங்கள் போவது எங்கே?
யாமோ! தாங்களோ! கொடுக்கும்
பொருளோ! அதை வாங்கிக் கொண்டு, தாங்கள் போகும் இடமோ! என எங்கோ தனியே இல்லை.
எமக்கு அன்னியமாய் எந்த நாம ரூபமும் இல்லையே ஐயா!
ஆகாயம் எப்படி எங்கம் நீக்கமற நிறைந்திருக்கிறதோ, அதே நிலையில், யாமும், தாங்களும், அனைத்தும் எல்லாம் அந்த
ஒன்றாகவே இருக்கிறோம் பிரபோ!
ஓ எம் ஆனந்த பரனே! இனி நீ எதை உபதேசம் செய்யப் போகிறாய்?அதைக் கேட்டு யாம் எங்கே தனியே
இருக்கிறோம்? உமக்கும் தனியே இருப்பும், இயக்கமும் இல்லை! அதே போல், எமக்கும் தனியே இருப்பும் இயக்கமும் இல்லவே இல்லை ஐயா!
இதை சொல்லும் வாக்கு ஏது? அதை கிரஹிக்கும் அறிவுதான் ஏது?
அவ்வொன்றுக்கு, அன்னியமாய் எதுவும் இல்லை! நமக்கன்னியமாய் எதுவும் இல்லை!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 127