ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 124
weblink
பாடல்: 124
குறைவின்றி, நிறைவின்றி,
குற்றமின்றி;
குணம் குறிகள் முதலியவை எவையுமின்றி;
மறைவின்றி, தெரிவின்றி,
மனதுமின்றி;
மனோமயமான மயக்கங்கள் அனைத்துமின்றி;
பிறிதின்றி, தனதின்றி, பிரிவொன்றின்றி;
பேதமுறும் எப்பொருளும்
ஒன்றுமின்றி;
அறிவொன்றே வடிவான
பிரம்மமாக;
அமைவுற்ற எம் மஹிமையினை
என் சொல்வோம் யாம்!
கருத்து:
ஹே கிருபாஸாஹரா! உமது கிருபையினால் பரிபூரண நிறை நிலை பெற்றுவிட்ட எம்மிடம், எந்த நிலையிலும் கூடுதல் குறைதல் இல்லை. செயலில் குற்றம், வார்த்தையில் குறை தெரியவும் அறியவும் இல்லை. எந்தவித மறைப்பும் இல்லை. தெளிவும் இல்லை. கற்பனையின் மனம் இல்லை.
அம்மனதால் தோன்றிய தோஷ குண மயக்கம் கலக்கம் இல்லை. எமக்கு அயலாகவும் எம்முடையதாகவும் எதுவும் இல்லை! பின்னமாகவும், பேதமாகவும், எதுவும் இல்லை! இல்லை! இல்லை!
அதன் காரணம்?
யாம் யாமாக! எமக்கு அயலாய் எதுவும் இல்லாததாக ஆத்மாவான அறிவாகவே அன்றும், இன்றும், என்றென்றும் பூரணப் பொலிவாகவே இருக்கிறோம்.
ஆனால், நாமரூப ஜகத்ஜீவ ஈஸ்வராதிகள் வந்தார்கள் என்றும், விளையாடினார்கள் என்றும், பின் மறைந்து விட்டார்கள் என்றும் புத்திசாலிகளான அறிவிலிகள் பிதற்றுகின்றனர். அப்படி ஒன்றுமில்லை என்பதே ஸத்தியம்.
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 124