ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 121
weblink
பாடல்: 121
ஆசிரியா! நீ அருளிச்செய்த
வண்ணம்;
அனிசமகம் பிரம்மாஸ்மி
என்பதாக;
நேசமுடன் நிரந்தரமாய்
தியானம் செய்து,
நிகில மனோ விகல்பமுமே நீங்கினோனாய்;
சாசுவத சொரூபத்தில்
நிருவிகல்ப;
சமாதி நிலை பெற்றவனாய் சாந்தனாகி;
பேசவொண்ணா பரப்பிரம்ம
போதம் பெற்று;
பெருமைமிகும் பிராமணனும்
ஆனோமய்யா!
கருத்து:
இப்பாடலில் பிராமணனை குறிப்பாக சுட்டிக் காட்டுகிறார்!
பிரம்மத்தை உணர்ந்தவனே பிராமணனாவான்! என்றும், வேதம் என சொல்லக்கூடிய நான்மறையை கற்றவனே வேதியனாவான்! என்றும், "நான்" மறையக் கற்றவனே ஞானி என்றும், ஸ்ரீமஹான்கள் தங்கள் அனுபவத்தில் கூறுவர்.
அதாவது, நான்கு வேதங்களையும், முறையோடு கற்று, அனுபவ நிலையில், அதை பிறருக்கு, அனுபவமாகும் நிலையில் ஓதுபவனே குலமுறைப்படி,
வேதியன் என்றும், அந்தணன் என்றும், விப்பிரன் என்றும்; அழைக்கப்படுவர்.
ஆனால், "நான்" மறைய (நான் அழிய கற்றவன்) அதாவது உணரப்பட்டவனே! வேதியனும் அல்ல! அந்தணனும் அல்ல! விப்பிரனும் அல்ல! அவனே பிராமணன்! அவனே பிரம்மத்தை உணர தகுதி உடையவனாவான் என ஸ்ரீ மஹான்கள் தம் அனுபவத்தில்
கூறுவர்!
அந்த நிலையில், இப்பாடலில் கூறப்படுவதாவது, 
அகம் பிரம்மம்! பிரம்மம் அகம்! அதாவது, அது நாம்! நாம் அது! என்ற அனுபவ நிலையில் தியானம் செய்து, மனம் மஹத்தாகும் நிலையில், "நான்,  எனது" நீக்கிய தன்மையினால், உடைமையும் உரிமையும் பாராட்டும், அபிமான, அஹங்காரம் நாசமாகி விட்டது.
ஆகவேதான், நிகில மனோவிகல்பமுமே நீங்கினோனாய்! என்றார். அதே நிலையில்தான், சாஸ்வத சொரூபத்தில் சாஸ்வதமாகவும், இயல்பாகவும் இருக்கும் நிலையை கூட்டி வைத்தீர்கள், என சொல்லி விட்டு, நிர்விகற்ப சமாதிநிலை கூடினோம் என்றான்.
பின்னர், விளக்க முடியாத சொல்ல முடியாத நிலையில் பரப்பிரம்மானந்தம் பெற்று, பிரம்மத்தை உணர்ந்த பிராமணன் ஆகிவிட்டோம் என்கிறான்.
                          எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 121
 
  
 
 
