ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 118
weblink 
தூலமெனத் தோன்றியதாம்
உடலும் காணோம்!
சூட்சுமமெனத் தோன்றியதாம்
உடலும் காணோம்!
மூலமெனத் தோன்றியதாம்
உடலும் கானோம்!
மோஹமெனத் தோன்றியதாம்
ஒன்றும் காணோம்!
காலமொடு தேசமுதல்
எவையும் காணோம்!
கற்பிதமாய் தோன்றியதோர்
அணுவும் காணோம்!
சாலவுப சாந்தமதாய் சலனமின்றி;
ஸின்மயமாம் பரப்பிரம்மம் ஆனோமையா!
கருத்து:
ஹே மஹானுபாவா! ஹே மஹாத்மா! பஞ்சீக்ருதம் பண்ணப்பட்ட பாண்டம் எனச் சொல்லிய தூல உடல்கள் எவையும் நாம ரூபத்துடன் காணோம்!
சூட்சுமம் எனச் சொல்லப்பட்ட கனவின் உடலோ, ஈசன் என சொல்லப்பட்ட, கர்த்தாக்களின் உடலோ, எந்த நாம ரூபத்துடனும் காணோம்!
மூலம் எனச் சொல்லும், அதி சூட்சுமமான ஆத்மாவுடன், தினமும் ஐக்கியமாகும் மன உடலையும் (கற்பனையின் எண்ணம்) காணோம்!
மோஹம் எனச் சொல்லக்கூடிய
இம்மனதை மயக்கும், எந்த வஸ்துக்களும், எந்த நாம ரூபத்துடனும் காணவே காணோம்.
காலதேச வர்த்தமானம் (வியாபாரம்) எனச் சொல்லும், காலத்திற்கு உட்பட்ட எந்த வஸ்துவும், எந்த நாம ரூபத்துடனும் காணோம்!
கற்பனையின் மனமோ, கற்பனையின் பொருளோ, எவையும், எந்த நாம ரூபத்துடனும் காணோம்!
உபஸாந்தியான, எம் சொரூபமான ஸின்மய சொரூபமே, யாமாகவும்,
யாமே அதுவாகவும் இருக்கின்றோம்! எம்மையன்றி, வேறு எதுவும் இல்லையே ஐயனே!
                            எல்லாம் நீ!
 
   
   
 
