ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 108
weblink
பாடல் - 108
மாதவனே! இந்நூலை
கேட்கத்தக்க;
மாசற்ற மாணாக்கன்
அரியவன்தான்!
சாதகமாய் இந்நூலை
உபதேசிக்கும்;
ஸத்குருவும் சாலவுமே
அறியவன்தான்!
பேதமுறா இந்நூலின்
புத்தகத்தை;
பெற்றவரும் மெத்தவுமே
அரியவராவர்!
ஓதிய இவ்வேதுவினால்
இந்நூல் எங்கும்;
உரமாக பிரசித்தி
மேவவில்லை!
கருத்து:
அது (ப்ரம்மம்) குற்றம் குறை இல்லாதது!
குறைவு நிறைவு இல்லாதது! விருப்பு வெறுப்பு இல்லாதது! போக்கு வரவு இல்லாதது!
இன்ப துன்பம் இல்லாதது! புண்ணிய பாபம் இல்லாதது! கொடுக்கல் வாங்கல் இல்லாதது! லாப நஷ்டம் இல்லாதது!
ஜனன மரணம் இல்லாதது! தோற்றம், இருப்பு, மாற்றம்,
மறைவு இல்லாதது!
தேடுதல், கிடைப்பது இல்லாதது! பார்ப்பதும் பார்க்கும்
பொருளுமாக இல்லாதது!
கேட்பதும் கேட்பவனும் இல்லாதது!
நாமரூபம் குணம் குறி இல்லாதது! தெய்வீக நிலையில், சூட்சும நாமரூப கர்த்தாக்களும் இல்லாதது! அவர்களை அடையும், ஸத்திய தர்மமும் இல்லாதது!
சொர்க்கமோ, மோட்சமோ, நரகமோ பத முக்திகளோ, பர முக்தியோ, ஜீவன் முக்தியோ இல்லாதது!
அது, இது, உண்டு, இல்லை, அவன், அவள் என சுட்டிக்காட்டப்பட்ட எந்த வஸ்துவும் இல்லாத ஒன்றை,
அதற்கு அப்பால் எவராயினும், எதுவாயினும் இருந்தாலல்லவோ அதை உணர முடியும், உணர்த்த முடியும்?
அது அதுவாகவே இருக்கிறது!
அதுவே நாமாகவும் இருக்கிறோம்!
இன்றைய கலியுக மாந்தர்கள் துவைதமாகவே பழகி விட்ட தன்மையாலும், பலன் கருதி
வியாபாரமாகவும், விளம்பரமாகவும், செய்யும் மனதுடையவர்களாக இருப்பதாலும்,
குருமாரும், பேர், புகழ், பட்டம், பதவி, பொன் பொருள் மோகம், பெண்ணின்ப போஹம், இவைகளையே தம் பிறவியின்
லட்சியமாக கொண்டு இருப்பதால், கேட்கும் மாணவனும் இல்லை. அதை உள்ளபடி உணர்வு பூர்வமாக உணர்ந்து உணர்த்தும், எந்த ஸத்குருவும் இல்லை.
ஆனாலும், ஒன்றிரண்டு விரல் விட்டு எண்ணக்கூடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களுக்காகவே இவ்வுலகம், நிலை பெற்றிருக்கிறது. அவர்கள் இல்லையானால், இவ்வுலகம்
இருக்க முடியாது. இருக்கக் கூடாது.
ஆனாலும், ஸ்ரீமத் ரிபு கீதை என்னும்
இந்த ஸ்வய ஞானானுபவ நூல்
எம் பக்குவ ஆன்மாவின் கைகளில் இருக்கிறதோ, அவர்கள் ஒரு காலும், குரு ஆக முடியாது!
அவர்கள் ஜீவன் முக்தரே! என்பது மட்டும் ஸத்தியமே. ஸத்தியமே!
ஸத்தியமே! இது எம் ஸத்குரு
வாக்காகும்.
பக்குவ ஆன்மா என்பவர்கள் இந்த நூலை இடைவிடாது நித்திய பாராயணம் செய்து, அதன் கருப்பொருளை சுவைத்து, அது நாம்! என ஆனவர்கள் என அறிக!
இத்துடன் 108 பாடல்களையும்
அதுவாகிய அவன் கருணையால் பூரணமாக்குகிறோம்!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 108