ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 105

weblink

பாடல்: 105

நின்னிடையே நிச்சலமாய்
நிலைத்து நிற்கும்;
நிலைமையதே நிகரற்ற
மோட்சமாகும்.
தன்னிடையே தானாக
தனித்திடாமல்;
தரங்கமென சலிப்பதுவே
பந்தமாகும்!
உன்னியிடில் ஒருருவாய் உன்னையன்றி;
உலைவு தரும் காரணமோர் அணுவுமில்லை!
தன்னியனே!
ஆதலினால், நீ எப்போதும்;
தன்னிடமே தானாக
தனித்திருப்பாய்!

கருத்து:

தன்னை அறிய தனக்கொரு கேடில்லை. தன்னை அறியாமல் தானே கெடுகின்றார். தன்னை அறியும் அறிவை அறிந்த பின், தன்னை அர்ச்சிக்கத் தானாய் இருந்தானே! என்றார் திருமூலர்.

இப்பாடலின் பொருள், தன்னை அறியும் அறிவே அறிவாகும்; அதுவே ஆத்ம அறிவாகும்! மற்ற நாமரூப படிப்பை அறிவதெல்லாம் பேயறிவாகும்; கலக்கத்தை தரும் அறிவாகும்! தன்னை அறியும் அறிவை உணர்ந்து அது ஆகிவிட்டால், அவனே ஜக ஜீவ ஈஸ்வராதிகளின் பராபரம் ஆகி விடுகிறான்! அங்கு பூஜை, புனஸ்காரம், அபிஷேகம், ஆராதனை, ஆரத்தி, அலங்காரம், நிவேதனம் இவைகளின் வழிபாடுகள் யாவும் தனக்கு தானே!

ஆகவேதான் இப்பாடலில், ஸ்ரீ ஸத்குரு அருமையாகவும், எளிமையாகவும், கனிவாகவும், கருணையாகவும் சொல்வதாவது, 

கொழந்தே! உனக்கு அன்னியம் யாரும் இல்லை! எதுவும் இல்லை!! உன்னில் நீ நிலைக்காமல், கடல் அலை போல், ஏன் சலிப்படைய வேண்டும்? உன்னை அசைக்கக் கூடியதொன்றும் இல்லவே இல்லை! உன் மனமே உனக்கு பகைவனுமாவான்! உன் மனமே உனக்கு நண்பனுமாவான்!

நாம ரூப ஜகம், நான், எனது என்றால், உன் மனமே பகைவன்! நாமரூப ஜகம் எல்லாம் நீயே, என்றால் உன் மனமே நண்பன்!

ஆகவேதான், தம் உத்தம மாணவனை, ஹே தனிமையானவனே! நீயும், யாமும் ஒரே கனியென உணர்! முதலில் காணும்போது நாம் இருவரும், இரு கனியாக தோன்றும் காரணம்? பழக்க வழக்க தோஷம். கனி இரண்டாக இருந்தாலும் அதன் சுவை ஒன்றுதானே! பழத்திற்கு விளக்கம் உண்டுதான். ஆனால், அப்பழ சுவைக்கு விளக்கம் உண்டோ! நீ சுவையை மட்டும் உணர். கனி தாமே மறைந்து விடும். கனியென்பதே நாம ரூபம் தானே?

கொழுந்தே! மனம் சலிக்காமல் பார்க்காதே! ஆனால்  உணர்வாயாக!! என்கிறார் ஸ்ரீ குருதேவர். அவனும் உணர்ந்தான். நீங்களும் உணர்ந்து விட்டீர்கள் என்றே பிரமாணமாகச் சொல்லுவோம்.

                       எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 105

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113