ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 101
weblink
பாடல்: 101
தினம் தவிராது இயற்றியிடும்
கர்மா என்றும்;
திடமாக செய்கின்ற
பக்தீ என்றும்;
அனந்தவித தெய்வ
உபாசனைகள் என்றும்;
அத்தெய்வ மூர்த்திகளின்
பூஜை என்றும்;
மனந்தனிலே மருவிய
இத்தோற்றம் எல்லாம்;
மஹத்தான பரம்பிரம்ம
சொரூபம் என்றே;
கனந்தவிரா அகண்டபர
நிச்சயத்தால்;
களங்கமில்லா பரப்பிரம்ம
மாத்திரமாவாய்!
கருத்து:
நித்திய கர்மா, நித்திய பூஜை, நித்திய தான தருமங்கள், நித்திய ஆலய தரிசனம், நித்திய இடையறா ஜபதபங்கள், ஆக இப்படி செய்யக் கூடிய ஸத் கர்மானுஷ்டானங்கள்
அனைத்துமே, மனோமய பிரவர்த்தியே ஆகும். இவை ஆரம்பத்தில் சித்த சுத்தியின் நிமித்தம் அவஸ்யம் தேவைதான். அவைகளை விடாது செய்து, கொண்டு வரும்போது, ஓர் பயம் உண்டாகும் எப்படி என்றால்,
இவைகளை விட்டால், என்ன ஆகுமோ? ஏது ஆகுமோ? என்ற பயபீதியானது, இச்சாதகன், மேல் நிலைக்குச் செல்ல முடியாதபடி சுவர் என ஆகிவிடுகிறது. நானே எழுப்பிய சுவரை கண்டு, தானே பிரம்மித்து, அவனால் மேலே செல்ல முடிவதில்லை.
இம்மனோமய பிரவர்த்தியை உடைத்தெறிந்து, மேல் நோக்கி சென்றாலன்றி, அச்சாதகனுக்கு
நிவர்த்தி மார்க்கம். இல்லவே இல்லை!
ஒர் உண்மையை உணர்!
நீ எந்த மூர்த்தியை, இஷ்ட மூர்த்தியாக, உபாசனை செய்து வந்தாயோ, அம்மூர்த்திக்கும் நீயே
ஆத்மா! உனக்கும் அவரே ஆத்மா! என்பதே சத்தியம்.
அங்கு, பேதம் இல்லா தன்மையினால், எல்லாம் ஒன்றே! அதுவே நம் மூர்த்தியும், அதுவே நாமும் என்ற ஓர்மையினால் பிரமாணமாகச் சொல்கிறோம், நீ தெய்வ நிந்தனை செய்யவில்லை! நீ தெய்வத்தை உபேட்சை செய்யவில்லை! உன் தெய்வததை வெறுக்கவில்லை! ஒதுக்கவில்லை! பழிக்கவில்லை! பகைக்கவில்லை! அபசாரம் செய்யவில்லை! ஒன்றுபடுத்தி இரண்டர கலந்து விடுகிறாய்! இந்த மனப் போராட்டம், இக்கலியுகத்தில் மட்டும்,
வெகு வேகமாக, தொற்று நோய் போல், அதிவேகமாக பரவி விட்டது.
ஆகவே, அன்பின் குழந்தைகளே! மேலே கூறிய அனைத்தும் மனமயக்கம் என உணர்ந்து, அனைத்தும் எந்த நாம ரூப தோசமும் இல்லை என்றும், அனைத்தும் அதுவாகவே இருக்கிறது என்றும், அது நாம் என்றும் உணர்ந்து, அதுவே நாம்! நாமே அது! என உணர்ந்து ஸ்வய அனுபவம் பெறுவீர்களாக!
எல்லாம் நீ!