ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 95
weblink
பாடல்: 95
சுத்த சிதாகாயமதாம்
நிஷ்பிரபஞ்ச;
சொரூபத்தில் பிரபஞ்சம்
என்றுமில்லை!
இந்துவைத பிரபஞ்சம் பரமார்த்தத்தில்;
இறை அளவும் இலதேனும் விவகாரத்தில்;
ஸித்தினுடைய விவர்த்தமதாம் சித்தம்தானே!
செறிகின்ற பிரபஞ்சம்
எனவே தோன்றும்!
புத்திரா! அச்சித்தத்தை (யாம்) புகன்ற வண்ணம்;
பூரணமாம் பாவனையால்
நாசம் செய்வாய்!
கருத்து:
இப்பாடலில், சுத்த சிதாகாயம் எனச் சொல்வதும். 90 வது பாடலில் சொல்லிய, கடவிண்ணும், மடவிண்ணும், எனச் சொன்னதும் ஒரே பொருள் என்று உணர்க.
இப்பாடலின் கருத்து, "சிதாகாசம்" என்றால் "இதய ஆகாயம்" எனப் பொருள்படும்! "மஹாகாயம்" என்றால் "அகண்டப்பெருவெளி ஆகாயம்" எனவும் உணர்க.
இப்பாடலின் உட்கருத்து யாதெனில், ஸிதாகாசமும், மஹாகாயமும்
ஒன்றாக இருந்தாலும், இங்கு கூறிய, சிதாகாசம் என்ற இதய ஆகாயமானது, மனம் நின்றாடும் எண்ண விருத்தியை குறிப்பதாகும்.
இதன் பொருள்?
சிதாகாசம் எனக்கூறும், இதய ஆகாயத்தில், மனம் இருந்து, எண்ண விருத்திகளை கற்பனை பண்ணுவதால் தோன்றும்,
நாமரூப பிரபஞ்சம் இதயத்தில்,
தோன்றுவதாக, கற்பனையில் அமைகிறது!
இதய ஆகாயத்தில் நாமரூப பிரபஞ்சம் இல்லை என்றும், ஆனால், நாமரூப பிரபஞ்சம் உண்டான இடம், இதய ஆகாசமே
எனப்பொருள் கொள்ள வேண்டும்.
அதாவது, மண்ணில் வீடு இல்லையென்பதே ஸத்தியம்.
அம்மண்ணில்தான் வீடு உண்டானது என்பதே ஸத்தியம்!
"பரம்" விளக்க முடியாத ஒன்று! ஆகாயம் என்பது, "இருக்கிறது என்ற ஒரே வார்த்தையால் விளக்கக்கூடிய ஒன்று.
மூன்று மற்றும் நான்காவது வரியில் கூறும் வாசகத்தை உணரவும்.
இத்துவைத பிரபஞ்சம் பரமார்த்தத்தில், இறை அளவும் இலதேனும் விவகாரத்தில் எனச் சொல்லி விட்டு, ஐந்தாவது வரியில், அதாவது, விகாரம் அடைந்து, அதனால் விவகரிப்பதனால்,
(பிரபஞ்சமே விவகார ஸத்தியம்! அதாவது வாக்கினால் விளக்கம் கொடுத்தும், பெற்றுக் கொண்டும், பேசிப் பேசியே, இவ்வுலகிற்கு இருப்புத்தன்மை கொடுக்கிறோம் என்பதே ஸத்தியம். வார்த்தை இல்லையானால் உலகம் இல்லை.)
உலகம் உண்டு என, அறியாமையினால் அனைவராலும் நம்பப்படுகிறது. மேலும், ஒர் வரியில் இறை அளவும் இல்லையென என்பதின் பொருளை உணர்ந்தால், ஹயன்! ஹரி! ஹரன்! என்ற திரிகர்த்தாக்களும், விவகரிக்கும் வாக்கிய விளக்கமே அல்லாது, உண்மையில் இல்லையென்பதே ஸத்தியம்! அவர்கள் அதுவாக இருக்கிறார்கள்.
இந்த தற்காலிக உண்மையும் எப்படி வந்ததெனில், ஐந்தாவதும், ஆறாவதும் உள்ள வரியை கவனிக்கவும். ஸித்தினுடைய விவர்த்தமதாம் சித்தம்தானே!
செறிகின்ற பிரபஞ்சம்
எனவே தோன்றும்! என்கிறார்.
ஸத்தே விளையாட்டின் நிமித்தம் ஸித்தாகி, விகார விளையாட்டின் நிமித்தம் ஸித்தாகி, விகார, விவகார நிமித்தமாக, சித்தே சித்தம் என ஆனதாக உணர வேண்டும்.
சித்தம் ஸித்தாகி விட்டால், நாம ரூப, ஜக ஜீவ, ஈஸ்வராதிகளின்,
நாம ரூப குணம் இல்லை. ஸித் ஸத்தாகி விட்டால் ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை!! ஒன்றுமில்லை!!!
"நாம் நாமாகவே, ஆனந்தமாக இருப்போம்!"
எல்லாம் நீ!