ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 96
weblink
பாடல்: 96
இருமையில்லா
சுசூப்திதனில் ஏகமாக;
இருக்கின்ற ஆன்மாவே தம்மிடத்தில்;
மருவியிடும் (மாயா)சக்தியினால் கனவின் கண்ணே;
மனமுதலாய் தோற்றியிடும்
நீதி போல;
ஒரு வடிவாய் உள்ள
பரப்பிரம்மம் தானே;
ஒன்றிய தம் சக்தியினால்
சித்தம் போலாம்;
ஸர்வ ஜக ஜீவ பர வடிவமாக;
சஞ்சலமாம் விவகார
தசையில் தோன்றும்!
கருத்து:
ஆழ்ந்த உறக்கத்தில், கைகள், கால்கள், மல ஜலத்துவாரங்கள், வாக்கு ஆகிய ஐந்து
கர்மேந்திரியங்களும்,
கண்கள், காது, கண், மூக்கு, சுவை,
ஸ்பரிசம் ஆகிய ஐந்து
ஞானேந்திரியங்களும், வேலைகளை செய்து களைத்து, ஓய்வெடுக்கிற தன்மையினால், மன எண்ணத்திற்கு, வேலையில்லாமல் போய்விட்டது.
ஆகவே, அம்மனமானது நமக்குள்
ஸ்வயம் ஜோதியாயும், மாறாத, மறையாத, தேயாத, வளராத,
தாம் தாமாய் உள்ள ஆத்மாவிடம்
சென்று கலந்து கொள்கிறது.
ஆதலினால், ஆத்மாவுடன், இரண்டற கலந்து மயமாகவில்லை!
இதுவே, ஆழ்ந்த உறக்கம்! இதுவே, ஆன்மாவாகிய அறிவோடு
கலந்து உறவாடும் ஹரிதுயில் ஆகும். இது கலக்காத நிலை! இது லயமாகும் நிலையாகும்.
அப்படி லயமாகும் காலத்தில், இந்த மாயா மனமானது, முன், பின், எண்ண விருத்திகளை, கற்பனா வடிவில் எழச்செய்து (இது இந்த மாயா மனதால் முடியும்) வினோத, விசித்திர, விபரீத, விகார,
விவகார, விரோத, குரோத, வீர்ய அஷ்ட குணங்களுடன், நாம ரூப குண சம்பந்த தோற்றங்களை, எழச் செய்து, இம்மாயா மனம் கனவில் விளையாடும். இந்த விளையாட்டு மன விளையாட்டாக இருந்தாலும், ஆத்மாவின் சக்தியேயாகும்! ஆனால், இச்செயல் மனதின் செயலே அன்றி ஆத்மாவுடையதல்ல.
இது பிரமாண உண்மை!
இனி பாடலுக்கு வருவோம்!
நனவிலும் (விழிப்பிலும்), கனவிலும், இருமை உண்டு. ஆனால், உறக்கத்தில் இருமைகள் இல்லை. ஆழ்ந்த உறக்கத்தில், தனிமையின் ஸ்வயமான ஆன்மாவானது, இயக்கம் இல்லாத்தன்மையினால் இயங்கி விளையாடும் நிமித்தம், தம் மாயா மனதை, பயன்படுத்தி, கனவின் நிலையில், அனேக நாம ரூப தோற்றங்களை, எழச்செய்து, விளையாடுவது போல,
அந்த காலாதீத பரசொரூபமும், செயல்படாத்தன்மையினால், யோக மாயாவினால், ஜகத் ஜீவ ஈஸ்வராதிகளாக வடிவெடுத்து மாயாவின் குழந்தையான மனதை வைத்து, விளையாடிக் கொண்டிருக்கிறதென சத்தியமாய் நம்பி, மன அசைவான சலன சஞ்சலங்களை எல்லாம் நாசம் செய்து விட்டு, நாம ரூப ஜக ஜீவ ஈஸ்வராதில் எல்லாம் நாமே என்றும், நாமே எல்லாம் என்றும், நமக்கு அன்னியம் எதுவுமே இல்லையென்றும், எல்லாம் நலமே, நலமே, நலமே என உப்புப்பதுமை போல கரைந்து விடுவாயாக!
எல்லாம் நீ!