ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 90
weblink
பாடல்: 90
கடமடமென்று உணர்வுற்ற
உபாதி நீங்கில்;
கடவிண்ணும் மடவிண்ணும்
ஒன்றே போல;
மடமை முதல் ஜீவபர
உபாதி நீங்கில்;
மாசற்ற ஜீவபரம் இரண்டும் ஒன்றென்று;
திடமருவும் ஊகத்தால் பரஜீவைக்கியம்;
இயல்புதனை இருமையற
அறிந்தே அதனால்;
அடரும் அகண்டாகார
சொரூபமாகி;
அசஞ்சலமாய் ஆன்மாவில்
அமர்ந்து நிற்பாய்!
கருத்து:
கடம் என்று சொல்லக்கூடிய உடலினுள் வியாபித்திருக்கும் ஆகாயமும், ஊசி நாட்ட இடம் இல்லாமல் எங்கும் பரந்து விரிந்திருக்கும் ஆகாயமும் ஒன்றே!
இங்கு, இந்த உடலே உபாதை என்ற மறைப்பு ஆகும். அதே போல சுத்தமான ஆத்மாவுக்கு, தனது மன எண்ணத்தால் "நாம் ஆத்மா" என உணர முடியாமல், "நான் ஓர் பந்தப்பட்ட ஜீவன்" என்ற எண்ணமே, அந்த ஆன்மாவுக்கு ஒர் உபாதையென்ற மறைப்பாகும்.
"நான் ஓர் பந்த ஜீவன்" என்றும், "நான் ஓர் குடும்பி" என்றும், "நான் ஓர் பிரம்மச்சாரி" என்றும்; எண்ணும் எண்ணமே, நம் ஆன்மாவின் மீது நம் மன எண்ணத்தால் நமக்கு நாமே போட்டுக் கொண்ட ஓர் திரை ஆகும். இந்த கவனக்குறைவு என்ற எண்ணத்தை மட்டும் நீக்கி விட்டு, "யாம் ஓர் ஜீவனல்ல; யாம் ஆத்மாவே!". என்ற ஓர் எண்ணத்தை மட்டும் ஏற்றுக் கொண்டால், "த்வம்" பதமாகிய "நாம்" (ஆத்மா), "தத்" பதமாகிய "பரமாத்மா" ஆகி விடலாம்! இதுவே, பர ஜீவ ஐக்கியமாம்!
இந்த பரஜீவ ஐக்கியம் நிறைவானால், அடுத்து உள்ள நம் யதார்த்த சொரூபமாகிய "அஸி" பதமும் நாமே! ஆகவே, மஹா வாக்கியத்தின்படி "தத் த்வம் அஸி" அதாவது, பரமாதீத சொரூபமும்; ஆத்ம சொரூபமும், இணைந்த பராபர சொரூபம் நாமே! என முடிக்கவும்.
இங்கு ஆகாயம், குடத்தினுள் இறங்கி வந்ததா? அல்லது குடம் ஆகாயத்தை இழுத்து பந்தப்படுத்திக் கொண்டதா? என ஓர் கேள்வி கேட்கப்பட்டது!
அதற்கான பதில் என்னவென்றால் ஆகாயத்தை எவரும் கட்டுப்படுத்தவோ, பந்தப்படுத்தவோ, முடியாது என்பதே ஸத்தியம்!
இங்கு, ஆகாயத்தை ஓர் உவமானமாக, "பரம்" என்று வைத்துக் கொள்வோம்.பரமானது விளையாட்டின் நிமித்தம், அது ஒன்றை உண்டு பண்ண, அப்படி வந்த ஒன்றின் நிழலே மாயா ஆகும்! அந்த மாயா, தம் சாமர்த்தியத்தினால், விளையாடும் பாத்திர பாண்டங்களை அதாவது குடத்தை, உண்டு பண்ணியது.
முன்பு சொன்ன, ஆகாயம் என்ற பரமானது, சர்வ வியாபியாய், ஊசி நாட்ட இடம் இல்லாமல், நிறைந்திருக்கிற படியால் இந்த குடத்தின், உள்ளும், வெளியும் இயல்பாகவும், சுதந்திரமாகவும், கட்டுப்பாடும் இல்லாமல், சர்வ வியாபகமாக இருக்கிறது, என்பது ஸத்தியம். அந்த மாயாவின் மகனான "மனமே" அந்த பரத்தின் பிரதிநிதியாக இருந்து விளையாடக் கூடியவன் என்று உணர வேண்டும்!
பரம் என்ற ஆகாயத்திற்கு, எவ்வித இயக்கமும் இல்லவே இல்லை! மாயாவின் மகனான மனதிற்கு, எல்லா விதமான இயக்கமும் உண்டு, என்பதையும் உணரவும்! இப்போது இந்த மனமானது, அந்த குடத்தை "நான்" உண்டு பண்ணினேன் என்றும், இக்குடம் என்னுடையது என்றும், சொந்தம் கொண்டாடி, உடைமையும், உரிமையும், பாராட்டிக் கொண்டிருக்கிறது.
ஆனால் ஓர் மஹத்தான உண்மை என்னவென்றால்?
1. இந்த ஆகாயம் இல்லாமல், அனைத்து அண்டரண்ட சராச்சரங்களும், விளக்கமும், அதன் இயக்கமும் ஆன நாமரூபமும் இல்லெயென்பதே, ஸத்தியம்!
ஸத்தியம்!! ஸத்தியம்!!!
"மனம் என்றால் எண்ணம்" அது சூட்சுமம். "பாத்திர பாண்டங்கள் என்ற குடம் என்றால், அது உடல்". அது வெறும் ஜடமே.
இக்குடம் என்ற தூலம் இல்லாமல், இந்த மனம் ஆட முடியாது. இப்போது இந்த மனமானது அக்குடக்தை நான்தான், உண்டு பண்ணினேன் என்றும், அக்குடம் என்னுடையது என்றும் வாதம் பண்ண முடியும்?
ஆகாயத்துடன் வாதம் பண்ண முடியுமா? அதுவோ செயலற்றது!! ஆகவே முடியாது. இங்கு, ஒர் குடத்தோடு, ஒர் குடம் தான் வாதம் பண்ண முடியும்? ஆனால், குடம் (குடம் என்பது ஜடம்) வாதம் பண்ணவில்லை! மனம்தான் வாதம் பண்ணுகிறது.
இப்படி வாதம் பண்ணி, பண்ணி பண்ணி, விகாரம் அடைந்து, அந்த விகாரமான காட்சியும், கேள்வியும், ஒன்றுடன் ஒன்று, மோதும். அதுவே விவகாரமாய் அதாவது, பிரச்சினைகளாய், உருவெடுத்து, அதுவே அனேக ஜாதி, மதம், இனம் மொழி, நாடு, தேசம் என பல பேதங்களை உண்டு பண்ணி, இக்குடத்தை எடுத்து ஆடுகிறது இந்த மாயா மனம். ஆனால், இவைகளை, அந்த பரம் காணவும் முடியாது! உணரவும் முடியாது!
2. ஆனால், மாயாவோ (ஸ்ரீ பகவானோ) கண்டும் காணாமல், கேட்டும் கேளாமல், ஜீவ நிலைக்கு (வினைக்கு) தக்கபடி ஓர் தோற்றத்தையும், பின் ஓர் மாற்றத்தையும் உண்டு பண்ணிக் கொண்டு பேரானந்தமாய் இருக்கிறது.
3. ஆனால், மனம் படைத்த இந்த ஜீவனோ தான் இறைவனின் குழந்தையே, என உணராமல் "நான் இன்னாருடைய மனைவி", " "நான் இன்னாருடைய கணவன்", :நான் இவர்களுடைய குழந்தை" என சொந்த பந்த புண்ணிய பாபங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள். இவை அனைத்தும் மனம் படுத்தும் பாடு என உணர்ந்தால் போதும்! அந்த பரமாகிய நிர்மல ஆகாயம் போல் இருக்கலாமே!
அந்த நிர்மலமான ஆகாயமானது, தனது யதார்த்த சொரூபமான, பரசொரூபத்தில் லயமாகி, தான்தானாய் மறைந்து விட்டால், பிரம்மாண்ட கோள்களும், ஜீவ வர்க்கங்களும், அவைகளை, உண்டு பண்ணினோம் என்ற திரிகர்த்தாக்களும் ஏது? ஏது ? ஏது?
இல்லை! இல்லை! இல்லை!
இதன் முடிந்த முடிவானது? பரம் என்ற ஆகாயம் இல்லாமல் குடம் இல்லவே இல்லை! குடம் ஆகாயம் இல்லாமல், துலங்குவதும் இல்லை! விளங்குவதும் இல்லை! இயங்குவதும் இல்லை!
"குடமோ ஒர் தொல்லை".
"மனமோ அது இல்லை!!
அதுவே ஆனந்த எல்லை! அற்றது!
எல்லாம் நீ!