ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 89
weblink
பாடல்: 89
மனதுடைய விருத்தி
உதிப்பதற்கு முன்னும்;
மற்றந்த விருத்தி
நசித்திட்ட பின்பும்;
தினையளவும் இல்லாத
இந்த ஜக ஜீவாதி;
இயங்கும் மனோ
விருத்தியினால் மத்தியத்தில்;
கனவதுவாய் இருப்பதென தோற்றினாலும்;
களங்கமறச் சோதிக்கின்
இல்லையென்றே;
அனியமெல்லாம் அத்யந்த
நேநி பண்ணி;
அசஞ்சலமாய் ஆன்மாவில்
அமர்ந்து நிற்பாய்!
கருத்து:
முன் பாடலில் சொல்லியபடி இவ்வுலகம், பகலில் விழிப்பு நிலையில், இருப்பதென தோற்றினாலும் மனோ விருத்தியினாலேயே (மனோமய கற்பனையே) இவ்வுலகம் இருப்புடையதாக தோற்றுகிறது. மனோமய கற்பனையாகிய எண்ணங்கள் இல்லையானால், இவ்வுலகம் இல்லாததே!
மனோ விருத்திகள் உண்டாகும் முன்னும், மனோ விருத்திகள் ஒழிந்து போன பின்னும், இந்த நாம ரூப ஜகம் இல்லை.
அவை இருப்பதாக, ஓர் தோற்றம் தோற்றினாலும், நேற்று உள்ளது இன்று இல்லை, இன்று உள்ளது நாளை என்னவோ? ஆகவே, நாம ரூப ஜகம் இல்லை.
கனவில் லட்சமோ, கோடியோ, பொன்னோ கிடைப்பது போல், தோன்றிய தோற்றம், நனவில் பயன் பெறுமோ? ஆகவே, இல்லாத உலகம் இல்லாததே!
இப்படி தெளிந்த விசாரணையால், மனம் தெளிந்து, மனம் மஹத்தானால்
நாம ரூப ஜக ஜீவ சொரூபங்கள், முக்காலமும், எக்காலமும் இல்லவே இல்லை.
இருப்பது ஒன்றே!
அது ஸத்தியமே!
அதுவே நாம்!
நாமே அது!
எல்லாம் நீ!