ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 57
weblink
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 57
பாடல்: 57
தேக முதல், நாம் என்னல்
துவைத விருத்தி!
திகழ் சாட்சி நாம் என்னல்
சாட்சி விருத்தி!
ஏகபரம் நாம் என்னல்
அகண்ட விருத்தி!
இம்மூன்று விருத்திகளில்
இரண்டை தள்ளி;
ஆகும், அகண்டாகார
விருத்தி தன்னை;
அநவரதம் ஆதரவாய்
அப்யாசித்து;
சோகமுறும் சித்த
விகல்பங்கள் தீர்ந்து;
சொன்ன அகண்டைகரஸ சொரூபமாவாய்!
கருத்து:
துவைத விருத்தி:
சரீராதிகளை நாம் என அபிமானித்து, அதன் புண்ணிய பாப கர்மாக்களை, தனதாக பாவித்து, அதனால் வரும் இன்ப துன்பங்களில் உழன்று அலைவது துவைத விருத்தியாகும்!
சாட்சி விருத்தி:
மனம் படைத்த மனித இனத்தை மட்டும், அவர்களின் வினை சம்பந்த இன்ப துன்பங்களை, கண்டும் காணாமல், கேட்டும் கேளாமல், அவரவர், வினைகளை பாரபட்க்ஷ தோஷம் இல்லாமல் விகிதாச்சாரப்படி, திட்டமிட்ட காரியங்கள் ஒழுங்காக நடைபெறுகிறதென்று உணர்ந்து, எந்த கோர குணங்களுக்கும் ஆட்படாமல், தெய்வ நிலையில், ஆனந்தமாக கண்டு களிப்பது சாட்சி விருத்தியாகும்.
அகண்ட விருத்தி:
மனித இனம் உட்பட 84 லட்சம் ஜீவ கோடிகளும், இயற்கையின் நிலையில், (ஸ்ரீ பகவான் கருணையினால்) திட்டமிட்ட காரியங்கள், "விகிதாச்சாரப்படி, பாரபட்க்ஷ தோஷமில்லாமல் ஒழுங்காக நடைபெறுகிறதென்ற பர உணர்வோடு ஒன்றி, எதையும் கண்டும் காணாமல் கேட்டும் கேளாமல், வாக்கை அறிவில் ஒடுக்கிக் கொண்டு, அதுவே நாம்! நாமே அது! என்ற பரபாவனையில், லயித்து இருப்பது அகண்ட விருத்தி ஆகும்.
ஓர் ஞானி தூல விருத்தி இரண்டையும் தள்ளி, சாட்சி விருத்தியில் பட்டும் படாமலும், அகண்ட விருத்தியில் சாஸ்வதமாகவும், இயல்பாகவும்
இருக்கலாம்!
எல்லாம் நீ!