ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 29
weblink
பாடல்: 29
கல்லாத கல்வியெல்லாம்
கற்ற போதும்;
கலக்கம் இல்லா பரப்பிரம்ம
ஞானம் ஒன்றை;
அல்லாது பவபீதி
விடுக்க வொண்னா;
ஆதலினால், ஆதரவாய்,
நீ எப்போதும்;
எல்லாமே பிரம்மமென்றும்,
அதுநாம் என்றும்;
ஏகமதாம் பரப்பிரம்ம
ஞானம் பெற்று;
பொல்லாத பவபீதி
அனைத்தும் போக்கி;
பூரணமாய் உள்ள
பரம்பொருளே யாவாய்!
கருத்து:
கல்லாத கல்வி என்றால்? தேவையற்ற வேண்டாத கல்வி! பேர், புகழ், பட்டம், பதவி, தரும் கல்வி! மந்திரங்கள்! அஷ்டசித்திகள்! தேவர் மூவருக்கும் அதீதமான சக்திகள்! வரி வடிவிலோ, வாக்கு வடிவிலோ, சொல்லவொண்ணா, விளக்கவொண்ணா அனைத்து கல்வியும் கல்லாத கல்வியாகும்!
கற்கும் கல்வி என்றால்? தன்னை அறியும் அறிவாகிய, ஆத்மஞானம் என்பதே கல்வி! மேலே கூறிய அனைத்து கல்லாத கல்வி எல்லாம், கற்றாலும், ஜனன மரண பயத்தை (இதில் கூறிய பவபீதியை) ஒழிக்க முடியாது. ஆத்ம ஞானம் ஒன்றாலேயே ஜனன மரணத்தை ஒழிக்க முடியும். ஆகவே கண்டிப்பாக பிரவர்த்தியை விடுத்து நிவர்த்தி மார்க்கமாகிய, அதுவே நாம்!
நாமே அது! என்ற மௌனானந்தமாய், சும்மா இருப்பாயாக!
குற்றம் குறைகளை நீங்குவதற்கு, பயிலும் பயிற்சியே கல்வியாகும்!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 29