ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 28
பாடல்: 28
வருத்தமில்லா திருக்கையிலும் வருத்தம் போல,
வழுவுற்ற மாபாவி மனதில்
தோன்றும்.
விருத்தமதாம் பாவமெல்லாம்
வீழ்ந்து மெத்த,
விமலமதாம் மனதுடையோர்க்கு இவ்வப்பியாசம்,
கருத்திலுற மிக எளிதாம்
ஆதலாலே,
கலங்காமல் எப்போதும் ஞானாப்பியாசம்,
திருத்தமுறச் செய்வோருக்கு தேவதேவன்,
திருவருளால் திடஞானம்
திகழுமன்றே!
கருத்து:
அதுவே நாம்! நாமே அது! நாமே எல்லாம்! என்ற இந்த பிரம்மான்ம பாவனையை செய்ய எந்த கடினமும் இல்லை! வருத்தமும் இல்லை! கடின பயிற்சியும் இல்லை! அதிசுலபம்! மிக எளிது! மிக, மிக, மிக சுகமானதாகும். ஆனால் கடினமாக தோற்றுகிறதே
என்றால்? இந்த மஹாபாபியான
மனதினால், தோற்றுகிறது எனச் சொல்வோம். காரணம், நம் கவனக் குறைவினால் ஏற்படும் தற்கவன சக்தியென்னும் தனது மனமுயற்சி செய்யாததே! இந்த மனமானது,
மஹாபாபியாக போய்விட்டது. நாமரூப
ஜகஜீவ கர்த்ருத்வத்தை விட்டு விட்டால்
இப்பாடலில் கூறியபடி, விமலமான
மனமாகி விடும். அதாவது, ஆணவம், கன்மம், மாயை அற்ற மனதாகி விடும்.
மலம் அற்ற மனம், மனமாக இருக்க முடியாது. அது மஹத்தாகவே ஆகி விடுகிறது.பின் முயற்சியோ, பயிற்சியோ, சாதனையோ, அதன் வேதனையோ இல்லவே இல்லை. நீ அதுவாகவே ஆகிவிட்டாய், என உறுதி கூறுகிறோம்.
எல்லாம் நீ!