ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 24
weblink
பாடல்: 24
ஆதலினால் அமலமான
மனதினாலே
அனவரதம் பரப்பிரம்ம
விசாரம் செய்து
போதகன பரப்பிரம்மம்
தானே எல்லாம்
பூரணமாம் பரப்பிரம்மம்
அதுநாம் என்று
சாதகமாம் பாவனையை
திடமாய் செய்து
சஞ்சலமாய் உளமனதை
நன்றாய் வென்று
ஜோதிமிகும் பரப்பிரம்மம்
தாமே யாகி
சும்மாவே இருந்து
மஹாஸாந்தி யாவாய்!
கருத்து:
ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலம் அற்ற அமலமான மனதினால், அனவரதம் இடைவிடாமல் தைலதாரை போல் அதுவே நாம்! நாமே அது! என அகண்டான்ம பாவனை செய்து வந்தால், சர்வ சதா எண்ணங்களால் சலிக்கும் மனம் நசிக்கும். ஆத்மஜோதி உன்னுள்ளேயே பிரகாசிப்பதை, நீ ஒருவனே உணர்வாய்! கர்மா நசிக்கும்! மனம் மஹத்தாகும்! நீ அதுவாகவே இருப்பாய்! இது எம் ஸ்வய அனுபவமாகும்!
ஆணவம்:-நான் என்பதை அடிப்படையாகக் கொண்டு, என்னால் என்ற நிலையில் அதிகாரம், ஆதிக்கம் செலுத்தி ஆணவமாய் அஹங்காரம் கொள்வதாகும். இது தற்பெருமை என்ற தற்புகழ்ச்சி கொண்டதாகும். இது புகழ், பட்டம் கொண்டு, கொடிகட்டி பறக்கும் நிலை என்று சொல்லவாம்!
கன்மம்:- எனது என்ற நிலையில்
உடைமை பாராட்டுவதனாலும், உரிமை கொண்டாடுவதனாலும், மான அவமானம், சூடு, சொரணை, லட்ஜை, வெட்கம் இவைகளை அடிப்படையாக கொண்டு ஆகாமிய கர்மாவை பெருக்கி, ஜனன மரணத்திற்கு வித்திடுதல் ஆகும், என்று சொல்லலாம். இக்கர்மாவில் பிராரப்தமும் சஞ்சிதமும் சேராது என தெளிக. காரணம், ப்ராப்தம் அந்த தூலத்தோடு முடியும் ஒன்று. சஞ்சிதம் பழைய மூட்டை, அது ஞான விசாரணையால் கருகி சாம்பலாகும் ஒன்று!
மாயை:- இது இல்லாததை இருப்புடையதாக்கி காட்டி மயக்குவது ஆகும். அதாவது ஒரு கட்டையில் கள்வன் போலவும், சிப்பியில் வெள்ளி போலவும், கானலில் ஜலம் போலவும்,
கயிற்றில் சர்ப்பம் போலவும், ஒன்றில் இல்லாததை இருப்பது போல் காட்டி ஏமாற்றுவதாகும். இன்னொரு வகையில் நேற்று மரம் என இருந்தது, இன்று தூண் ஆனது, நாளை விறகு என ஆகும். ஆக இப்படி, நாம ரூபத்தை மாற்றி மாற்றி நம்மனதை மோஹத்தையும், கோபத்தையும், அதன் போகத்தையும், இயல்பாகவே உண்டு பண்ணி பிறவித்தளையை பூட்டுவதாம்.
எல்லாம் நீ!