ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 17

பாடல்: 17
நில்லாமல் எங்கும் ஓர்
நிறைவாய் நின்ற,
நிகில பரிபூரணமாம்
பிரம்ம ரூபம்,
அல்லாமல் ஓரணுவும்
எங்கும் இல்லை.
அகிலமுமே அகண்டபரப் பிரம்மமேயாம்.
எல்லாமும் பரப்பிரம்மம்
நாமே என்றிங்கு;
எப்போதும் பாவித்து
மனதை வென்று;
சொல்லாலும் சொல்ல
வொண்ணா பரமேயாகி;
சும்மாவே இருந்து மஹா சாந்தியாவாய்!
கருத்து:
நிர்மல ஆகாயம் போல், எங்கும் நீக்கமற, நித்திய பூரணப்பிரம்மம் அல்லாமல், வேறு எதுவுமே எங்குமே இல்லை. அதை வரி வடிவிலோ வாக்கு வடிவிவோ, விளக்க எவராலும் முடியாது. அனைத்து நாம ரூபங்களும், ஜீவ சொரூபங்களும், அதுவாக இருக்கிறதேயன்றி, அவைகளாக இல்லவே இல்லையென, மன அசைவற்ற நிலையில், சொல்லற சும்மாவே சுகமாக இருப்பாயாக!
எல்லாம் நீ!
